குடி குடியை கெடுத்தது; கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் விஷம் கொடுத்து மகன்-மகளை கொன்று தாய் தற்கொலை
ஊஞ்சலூர் அருகே குடி குடியை கெடுத்ததுபோல், கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே குடி குடியை கெடுத்ததுபோல், கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
மதுப்பழக்கம்
ஊஞ்சலூர் அருகே வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட வீரப்பகவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி சசிகலா (33). இவர்களுக்கு நிதின்சங்கர் (12) என்ற மகனும், சுதர்சனா (10) என்ற மகளும் இருந்தனர். இதில் நிதின்சங்கர் 7-ம் வகுப்பும், சுதர்சனா 5-ம் வகுப்பும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தார்கள்.
பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு என்று கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
வாழைப்பழத்தில் விஷம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரபு மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் பிரபுவை சசிகலா கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சசிகலா மன வேதனை அடைந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்தார். ஆனால் தான் இறந்துவிட்டால், குழந்தைகளை வளர்க்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்த சசிகலா மகன், மகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிடவும் முடிவு செய்தார்.
இதையடுத்து சசிகலா தனது மனதை கல்லாக்கி கொண்டு வாழைப்பழத்தில் தென்னை மரங்களுக்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரையை வைத்து கொடுத்தார்.
தந்தையிடம் கூறினார்...
விஷம் கலந்து இருப்பது தெரியாமல் தாய் கொடுத்த வாழைப்பழங்களை நிதின்சங்கரும், சுதர்சனாவும் சாப்பிட்டார்கள். குழந்தைகள் சாப்பிட்டதை பார்த்த பிறகு சசிகலாவும் விஷ மாத்திரையை சாப்பிட்டார்.
சிறிது நேரம் சென்றதும், வீட்டின் மற்றொரு அறையில் இருந்த தந்தையிடம் நிதின்சங்கர் சென்று அம்மா வாழைப்பழம் கொடுத்தார். அதில் ஏதோ இருந்தது என்று கூறியுள்ளான்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சசிகலா, நிதின்சங்கர், சுதர்சனா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
3 பேரும் சாவு
ஆஸ்பத்திரியில் 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் நேற்று காலையில் நிதின்சங்கர், சுதர்சனா, சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார்கள்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
கிராமமே சோகம்
தொடர்ந்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார்கள். மேலும் மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். குடும்பத்தகராறில் பெற்ற மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story