ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை ஆனது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை ஆனது.
டாஸ்மாக் கடை திறப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் முதலில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மீண்டும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கியது. ஆனால் ஈரோடு, திருப்பூர், கோவை உட்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
தற்போது ஈரோடு உள்பட 11 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதால் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் உள்ளன. சாதாரண நாட்களில் ரூ.3 கோடி முதல் ரூ.4 வரையும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரையும் மது விற்பனை ஆகும்.
ரூ.7 கோடிக்கு மது விற்பனை
2 மாதங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மது பிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு ஆர்வமுடன் வந்து தங்களுக்கு தேவையான மது பானங்களை வாங்கிச்சென்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510-க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக பீர் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாகவும், கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story