உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகை அபேஸ்


உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 7 July 2021 3:51 AM IST (Updated: 7 July 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அந்தியூர்
அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உணவு பாதுகாப்பு அதிகாரி
அந்தியூர் அருகே ஆலம்பாளையம் எழுதியமருதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் ஒருவர் டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு வந்தார்.
அப்போது அவர் தன்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை நடத்த வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வீட்டில் சோதனை
பின்னர் மளிகை கடையில் சோதனையும் நடத்தினார். கடையில் எந்த புகையிலை பொருட்களும் கிடைக்கவில்லை. எனவே வீட்டில் பதுக்கி வைத்திருக்க வாய்ப்புள்ளதால் வீட்டையும் சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு சிறிது தூரத்தில் உள்ள வீட்டுக்கு ஆறுமுகத்தை அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து சென்றார்.
அங்கு வீட்டிற்குள் உள்ள பீரோவை திறந்து சோதனை நடத்தி கொண்டு இருந்தார். அப்போது அந்த மர்மநபர் தன்னை தேடி மற்ற அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களிடம் நான் வீட்டுக்குள் இருப்பதாக தெரியபடுத்தவும் என்றும் அவர் சொல்லியுள்ளார். அவர் கூறியதை நம்பிய ஆறுமுகம் வீட்டில் இருந்து வெளியே வந்து, மற்ற அதிகாரிகள் வருகிறார்களா என்று பார்த்து கொண்டிருந்தார். 
6½ பவுன் நகை
இதற்கிடையே அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர், உங்களது வீட்டிலும் எந்தவொரு புகையிலை பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும், ஆறுமுகத்தை மீண்டும் மளிகைக்கடையிலேயே இறக்கிவிட்டு அவர் சென்றுவிட்டார். 
இந்தநிலையில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் வீட்டுக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6½ பவுன் நகையை காணவில்லை. அப்போதுதான் ஆறுமுகம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், ஆலாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகையை அபேஸ் செய்த மர்மநபரின் உருவம் பதிந்து உள்ளதா? என்றும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து கடைக்காரரின் வீட்டில் நகையை நூதன முறையில் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story