சுங்க கட்டண பிரச்சினை: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்


சுங்க கட்டண பிரச்சினை: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்
x

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சுங்க கட்டண பிரச்சினை தொடர்பாக வியாபாரிகள் இன்று (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சுங்க கட்டண பிரச்சினை தொடர்பாக வியாபாரிகள் இன்று (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
சாலை மறியல்
ஈரோடு வ.உ.சி. பூங்கா திடலில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரர் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், கடந்த 5-ந்தேதி மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி விதித்த சுங்க கட்டணத்தை மட்டுமே செலுத்தவும், ரசீது வழங்கினால் மட்டுமே கட்டணத்தை செலுத்தவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரரின் ஊழியர்கள் நேற்று முன்தினம் மார்க்கெட்டிற்குள் வியாபாரிகளின் வாகனங்களையும், காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
பேச்சுவார்த்தை
இதனால் அதிருப்தி அடைந்த காய்கறி வியாபாரிகள், சரக்கு வாகன டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுங்க வசூலிக்கும் குத்தகை ஊழியர்களையும், குத்தகைதாரரையும் கண்டித்து முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார்.
சுங்க கட்டண பிரச்சினை தொடர்பாக, ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா நேற்று காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வியாபாரிகள், ஆர்.டி.ஓ. பிரேமலதாவிடம் குறைகளை தெரிவித்தனர்.  இதையடுத்து கலெக்டர், ஒப்பந்ததாரர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனவும், அதுவரை அமைதியாக இருங்கள் எனவும் வியாபாரிகளிடம் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடையடைப்பு
இதற்கிடையில் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் சுங்க குத்தகைதாரரை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) கடையடைப்பு நடத்துவதாக அறிவித்து நேற்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
இதன் காரணமாக நேற்று காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனர்.

Next Story