சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 July 2021 3:06 AM IST (Updated: 8 July 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
பழமையான கோவில்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் இந்த கோவில் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் பிடாரியூர் திருமுக மலர்ந்தநாதர் கோவில், பிடாரியூர் திருக்கண் நாராயண பெருமாள் கோவில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவியார்பாளையத்தில் உள்ள பரமசிவன் கோவில் மற்றும் சென்னிமலை பகுதியில் பல்வேறு ஊர்களில் கிராம கோவில்களும் உள்ளன.
மன்னர் காலத்தில்
இதில் பிடாரியூரில் உள்ள திருமுக மலர்ந்தநாதர் கோவில், திருக்கண் நாராயண பெருமாள் கோவில் மற்றும் சிவியார்பாளையம் பரமசிவன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பில் நிலங்கள் உள்ளது.
இந்த நிலங்கள் அனைத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் கோவில்களுக்கு பொதுமக்கள் தானமாக வழங்கியது ஆகும். அப்போது இந்த நிலங்களுக்கு உண்டான ஆவணங்கள் எதுவும் தயார் செய்யப்படாமல் இருந்தது. மேலும் 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த நிலங்களுக்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு இதுவரை அறநிலையத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு
ஆனாலும் பல தலைமுறைகளாக இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சிவியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் மூலம் மீட்கப்பட்டது. அதேபோல் சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் நிர்வாகத்தில் உள்ள மற்ற கோவில்களின் ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக பக்தர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
பிடாரியூரில் உள்ள திருமுக மலர்ந்தநாதர் கோவிலுக்கு சொந்தமாக 36.84 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் பல தலைமுறைகளாக 25 பேரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. அதேபோல் பிடாரியூர் திருக்கண் நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 4.82 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலம் தனி நபர் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது.
கோவில்களுக்கு சாதகமாக...
இந்த நிலங்கள் அனைத்தும் அட்டவணை பிடாரியூர் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட ஓட்டப்பாறை ஊராட்சி பகுதியில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி எடுத்த நடவடிக்கையின் பேரில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மேலப்பாளையம் அரசு பள்ளிக்கு பின்புறம் மீட்கப்பட்டது.
திருமுக மலர்ந்தநாதர் கோவிலுக்கு சொந்தமான 36.84 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மற்றும் திருக்கண் நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4.82 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சப்-கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதியில் 2 கோவில்களுக்கும் சாதகமாக தீர்ப்பு வந்தது.
மேல் முறையீடு
அதன் பின்னர் ஆக்கிரமிப்புதாரர்கள் 11 பேர் 10 ஏக்கர் நிலங்களுக்காக சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அப்போது சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி ஈரோடு கீழ் கோர்ட்டுக்கே திருப்பி அனுப்பியது. அதன்பிறகு நடந்த விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் 2 கோவில்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புதாரர்கள் 11 பேர் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் கோவையில் இந்து அறநிலையதுறைக்கு என செயல்படும் இணை ஆணையர் நீதிமன்றத்திலும் இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
தமிழகம் முழுவதும் அறநிலைய துறைக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னிமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு உண்டான மூலப்பத்திரம், பட்டா என அனைத்து ஆவணங்களும் கோவில் நிர்வாகம் வசம் இருப்பதால் பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story