பெரியபாளையத்தில் அரசு அலுவலக மாடியில் இருந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு


பெரியபாளையத்தில் அரசு அலுவலக மாடியில் இருந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 July 2021 11:43 AM IST (Updated: 8 July 2021 11:43 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையத்தில் கட்டப்பட்டு வந்த புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிட பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ரூ.2 கோடியே 84 லட்சம் செலவில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், வடக்குநல்லூர் ஊராட்சி, கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி (வயது 43) என்பவர் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இவருடன் சேர்த்து சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, 2-வது மாடிக்கு ஏறிச்சென்று கொண்டிருந்த தொழிலாளி குமாரி, கால் தவறி கட்டிடத்தின் கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த உடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அவரை மீட்டு, பெரியபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணை

அப்போது அங்கு படுகாமடைந்த குமாரியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான குமாரியின் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

பலியான குமாரியின் கணவர் முனுசாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கட்டிட வேலை செய்து, சும்தரா(15), சுஜித்ரா(12) ஆகிய 2 பெண் குழந்தையை குமாரி வளர்த்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே தந்தை, தாய் இருவரையும் இழந்த 2 பெண் குழந்தைகளும் ஆதரவற்று நிர்கதியாய் நிற்பது அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story