அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
சூறாவளிக்காற்றுடன் மழை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம், கோவிலூர், ஜி.எஸ்.காலனி, செல்லபாளையம், சங்கராபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அந்தியூர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஆயிரக்கணக்கான வாழைகள்
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூா் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
மேலும் கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களும் சூறாவளிக்காற்றில் சாய்ந்து விழுந்தன.
விவசாயிகள்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை, கதலி, மொந்தன் போன்ற வாழைகளை பயிரிட்டு இருந்தோம்.
இந்த வாழைகள் அனைத்தும் நன்கு விளைந்து அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்தன. இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தோம். இ்ந்த நிலையில் திடீரென்று வீசிய சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தது எங்களை கவலையடைய செய்துள்ளது.
இழப்பீடு
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதைத்தொடர்ந்து அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் சூறாவளிக்காற்றினால் சாய்ந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story