பெரம்பூர், வியாசர்பாடியில் ரூ.78½ கோடியில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்


பெரம்பூர், வியாசர்பாடியில் ரூ.78½ கோடியில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 9 July 2021 10:58 AM IST (Updated: 9 July 2021 10:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் ரூ.78.47 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 480 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

சென்னை,

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் சென்னை பெரம்பூர் எம்.ஜி.ஆர். நகர் திட்டப்பகுதியில் ரூ.45.31 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பழைய வியாசர்பாடி திட்டப்பகுதியில் ரூ.33.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்த ராவ், கலாநிதி வீராசாமி எம்.பி., ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

அனைத்து வசதிகளுடன்...

குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகள் தனியார் உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளது போல் அனைத்து வசதிகளுடன் கட்டித்தரப்படும். எம்.ஜி.ஆர். நகர் திட்டப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் 411 சதுர அடி பரப்பிலும், பழைய வியாசர்பாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 400 சதுர அடியிலும் கட்டப்படும். இதில் நவீன வசதிகளுடன் பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிவறை ஆகியன அமைய உள்ளது.

எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பில் ‘லிப்ட்’ மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட உள்ளன. மழைநீர் கால்வாய்கள் மற்றும் கான்கிரீட் சாலைகள், தெரு விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்படும்.

5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

எம்.ஜி.ஆர். நகர் திட்டப்பகுதி 1987-ம் ஆண்டும், பழைய வியாசர்பாடி திட்டப்பகுதி 1965-ம் ஆண்டும் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் காலமாற்றத்தால் சிதிலமடைந்து வருகிறது. அந்தவகையில் 20 ஆயிரம் வீடுகள் சிதிலமடைந்துள்ளது. இதனை மறுகட்டுமான செய்ய ஏறத்தாழ ரூ.3,200 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான தொகையை படிப்படியாக வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இப்பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இதனை விரைவாக அவர் பொதுமக்களுக்கு வழங்குவார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளை விரைவாக செயல்படுத்தி தமிழக மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றியுள்ளார். எந்த நம்பிகையோடு இந்த ஆட்சியை நீங்கள் கொண்டு வந்தீர்களோ, அந்த ஏழை-எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பொற்கால ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வியாசர்பாடியில் ஆய்வு

அந்தவகையில் பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் ரூ.78.47 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 480 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் வியாசர்பாடியில் உள்ள டி.டி.பிளாக் திட்டப்பகுதியில் ரூ.60.60 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 468 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story