தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


தென்னை சாகுபடியில் விவசாயிகள்  ஆர்வம்
x
தினத்தந்தி 9 July 2021 5:58 PM GMT (Updated: 9 July 2021 5:58 PM GMT)

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்து வருவதால் தானிய உற்பத்தி படிப்படியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடிப்பட்டி
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்து வருவதால் தானிய உற்பத்தி படிப்படியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் 
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் கம்பு, சோளம், தினை, ராகி போன்ற சிறுதானியங்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தது. அதுவே நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாகவும் இருந்தது. ஆனால் படிப்படியாக சிறுதானியங்கள் பயன்பாடு குறைந்து தமிழர் உணவில் மிக முக்கிய இடத்தை அரிசி சாதம் பிடித்தது. இதனால் சிறுதானிய உற்பத்தியும் படிப்படியாக குறைந்தது. 
தற்போதுவரை நமது உணவு முறையில் அரிசி பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் படிப்படியாக நெல் சாகுபடிப் பரப்பும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னோடி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தொழிலாளர் பற்றாக்குறை
‘இன்றைய நிலையில் விவசாயிகளின் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது கூலித்தொழிலாளர் பற்றாக்குறையாகும். இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க தீர்வு தேடும் விவசாயிகளின் தேர்வாக இருப்பது தென்னை சாகுபடியாகும். ஏனென்றால் தென்னை சாகுபடியை பொறுத்தவரை தொடர் பராமரிப்பு, அறுவடை போன்றவற்றுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுவதில்லை. இதனால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகரித்து வருகிறது.
அதேநேரத்தில் மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் அமராவதி ஆற்றுப் பாசனத்தின் மூலம் காலம் காலமாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட ஆயக்கட்டு பாசனப் பகுதிகளிலும் தற்போது தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. இந்த நிலைக்குக் காரணம் நெல் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையிழப்பா? அல்லது தென்னை சாகுபடியில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாய் உத்தரவாதமா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே பல விவசாயிகள் தானியங்கள் சாகுபடியைக் கைவிட்டு காய்கறிகள் சாகுபடிக்கு மாறிவிட்டனர். 
அதிகாரிகள் நடவடிக்கை 
காய்கறி சாகுபடிக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும் குறுகிய காலத்தில் தொடர் வருவாய் என்ற அடிப்படையில் பலரும் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்கின்றனர். ஆனால் நெல் சாகுபடியைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக பெரிய அளவில் விலை உயர்வில்லாமலேயே நெல் விலை தொடர்கிறது. ஆனால் இடுபொருட்கள் முதல் கூலி வரை அனைத்து செலவினங்களும் பல மடங்காக விலை உயர்ந்துள்ளது. அத்துடன் சில நேரங்களில் உரிய பருவத்தில் மழை பெய்யாமல் கெடுக்கிறது. ஒருசில நேரங்களில் பருவம் தவறிப் பெய்து கெடுக்கிறது. 
இதுவும் விவசாயிகள் நெல் சாகுபடியில் தயக்கம் காட்டுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதேநிலை நீடித்தால் பிரதான உணவுப் பயிரான தானியங்களின் சாகுபடி படிப்படியாகக் குறைந்து நமது உணவுத் தேவைக்கு வெளி மாநிலங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்படக்கூடும். 
எனவே தானிய உற்பத்தியை ஊக்குவிக்கவும், சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஆண்டுதோறும் சாகுபடிப்பரப்பு கணக்கிடப்பட்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் தானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு சிறப்புத் திட்டங்கள் வகுக்க வேண்டும்'.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story