சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 9 July 2021 9:12 PM GMT (Updated: 9 July 2021 9:12 PM GMT)

ஆனி அமாவாசையையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்:

பிரசித்தி பெற்ற கோவில்
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் கோவிலில் நடை திறக்கப்படும்.
இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள், ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டன. அன்று சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் ஆனி மாத அமாவாசை என்பதால் கோவில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மதியம் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Next Story