பெருந்துறையில் லாட்ஜில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டம்; 4 பேர் கைது: பணம்- செல்போன்கள் பறிமுதல்
பெருந்துறையில் லாட்ஜில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெருந்துறை
பெருந்துறையில் லாட்ஜில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆன்லைன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் மேலாளராக குமரேசன் (வயது 30) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது லாட்ஜில் ஈரோடு அசோகபுரத்தை சேர்ந்த சக்திவேல் (41), வெங்கடாச்சலம் (36), விக்னேஸ்வரன் (26), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த காளிமுத்துக்குமார் (26) ஆகிய 4 பேர் அறை எடுத்து தங்கி இருந்தனர். மேலும் 4 பேரும் தங்களது செல்போன்கள் மூலம் ஆன்லைனில் லாட்டரி முடிவுகளை பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த லாட்ஜ் மேலாளர் குமரேசனிடம் 4 பேரும் சேர்ந்து நீங்கள் 1,000 ரூபாய் கட்டினால் சில நிமிடங்களில் அது பல மடங்காக ஆன்லைன் லாட்டரி மூலம் கிடைக்கும் என்று, ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதை நம்பிய குமரேசன், உடனடியாக அவர்களிடம் 1,000 ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி பணம் பல மடங்காக கிடைக்கவில்லை.
4 பேர் கைது
இதைத்தொடர்ந்து அந்த 4 பேரும் மீண்டும் 1,000 ரூபாயை கட்டுங்கள், நீங்கள் இழந்த பணத்தை திரும்ப மீட்டு விடலாம் என்று கூறி உள்ளனர். ஆனால் இதைக்கேட்ட குமரேசன் மீண்டும் இவர்களிடம் ஏமாறக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து உள்ளார். மேலும் குமரேசன் தனது லாட்ஜில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே போலீசார் லாட்ஜில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 4 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story