ஐகோர்ட்டு வக்கீலிடம் ரூ.10 லட்சத்தை அபகரிக்க கடத்தல் நாடகம் நண்பருடன் உறவுக்கார வாலிபர் கைது
சென்னை ஐகோர்ட்டு வக்கீலிடம் ரூ.10 லட்சத்தை அபரிக்க கடத்தல் நாடகம் ஆடிய அவருடைய உறவுக்கார வாலிபர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 68). ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். 3 வருடங்களுக்கு முன்பு இவருடைய ஒரே மகன் இறந்துவிட்டார். இதனால் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவருடைய மனைவியின் தங்கை மகன் சண்முகம். இவர், கடந்த 2 வருடங்களாக இவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் ராஜேஸ்வரனின் செல்போனில் பேசிய மர்மநபர், “உங்கள் உறவுக்காரரான சண்முகத்தை கடத்தி வைத்து உள்ளோம். அவரை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்துள்ளோம். உடனடியாக ரூ.10 லட்சம் கொடுத்தால் அவரை அனுப்பி வைப்பதாக” கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
மேலும் சண்முகத்தின் கைகளை பின்புறமாக கட்டிவைத்து அவரது முகத்தை காண்பிப்பது போலவும், அவரது முதுகில் கடத்தல் ஆசாமி காலால் மிதிப்பது போன்றும் 2 புகைப்படங்களை அவரது செல்போனுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து ஆராய்ந்ததில் அவர் வண்டலூரில் இருந்து பேசியது தெரிந்தது. போலீசார் வண்டலூர் சென்று பார்த்தபோது, அங்குள்ள அறைக்குள் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சண்முகமும், மற்றொருவரும் குடி போதையில் படுத்து கிடந்தனர்.
இருவரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராஜேஸ்வரனின் மகன் 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவருக்கு ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்துள்ளது.
அந்த பணத்தை வக்கீல் ராஜேஸ்வரனிடம் இருந்து அபகரிக்க சண்முகம், தனது நண்பர் ரவியுடன் சேர்ந்து இந்த கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story