100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்ததும் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு
100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்த உடன் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்த உடன் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தனியார் பஸ்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பஸ் சேவை நிறுத்தப்பட்டன. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் 50 சதவீத பயணிகளுடன் பஸ் சேவையை தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முதல் கட்டமாக 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 269 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் 40 பஸ்கள் மாவட்டத்திற்குள்ளும், மீதமுள்ள பஸ்கள் சேலம், கோவை, கரூர், திருப்பூர், நாமக்கல் போன்ற வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் ஒரு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
100 சதவீத பயணிகள்
இது குறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-
கொரோனா தாக்கம் காரணமாக பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ் இயக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு கட்டுப்படியாகாது. இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்சை இயக்குவது என்பது சாத்தியமில்லை. இதனால் இப்போதைக்கு பஸ் இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை. இது எங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். ஒரு சில மாவட்டங்களில் பெயரளவிற்கு தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. 100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்த உடன் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்குவது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story