பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள்
பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்தினா்.
பவானி
பவானி அடுத்த ஜல்லிக்கல் மேடு அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் பெரியாண்டிச்சி மற்றும் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் யாருக்குச் சொந்தம் என கடந்த ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் பொக்லைன் எந்திரம் கொண்டு கோவிலை இடித்ததாக கூறி அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கே.சி.கருப்பணன், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து 100 அடி தூரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி மீண்டும் கோவில் நிறுவப்பட்டது. அந்த கோவிலில் பெரியாண்டிச்சி, அங்காளம்மன், காளி, வீரகாரன், கருப்புராயன், சிங்க வாகனம், பலிபீடம் ஆகிய சிலைகள் வைக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு சென்று பார்த்தபோது சிலைகள் பீடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு சேதம் அடைந்திருந்தன. யாரோ மர்மநபர்கள் சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் பொறுப்பாளர்கள் குழு பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதைத்தொடர்ந்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் (பவானி), கிருஷ்ணமூர்த்தி (அம்மாபேட்டை) உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி மீண்டும் பழைய இடத்திலேயே விக்கிரகங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story