ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
டாஸ்மாக் மூடல்
கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. டாஸ்மாக் கடைகள் மூலம் சாதாரண நாட்களில் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரையும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரையும் மது விற்பனையாகும்.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் கடந்த 5-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அன்றைய தினம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது.
ரூ.26½ கோடிக்கு மது விற்பனை
குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடையின் முன்பு வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. மது பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளான கடந்த 5-ந் தேதி மட்டும் ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510-க்கு மது விற்பனை நடந்தது. 6-ந் தேதி மாவட்டம் முழுவதும் ரூ.5 கோடியே 40 லட்சத்து 78 ஆயிரத்து 810-க்கும், 7-ந் தேதி ரூ.5 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 730-க்கும், 8-ந்தேதி ரூ.4 கோடியே 63 லட்சத்து 90 ஆயிரத்து 170-க்கும், நேற்று முன்தினம் ரூ.4 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 330-க்கும் என கடந்த 5 நாட்களில் மொத்தம் ரூ.26 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 550-க்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story