பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 12 July 2021 2:37 AM IST (Updated: 12 July 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், சிறுவர் ரெயில், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களும், அழகிய புல்தரைகளும் உள்ளதால் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வந்து பொழுதுபோக்குவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாத காலமாக பூங்கா மூடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி முதல் மீண்டும் பூங்கா திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பூங்காவுக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அணை பூங்காவில் குவிந்தனர். அங்குள்ள ஊஞ்சல், சறுக்கில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணை பூங்கா முன்புள்ள மீன் கடைகளில் மீன் உணவுகளை வாங்கி உண்டனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story