கும்மிடிப்பூண்டியில் விபத்து: டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி


கும்மிடிப்பூண்டியில் விபத்து: டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 July 2021 10:14 AM IST (Updated: 12 July 2021 10:14 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய டயர் உருக்கு தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டயர் தொழிற்சாலை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான டயர் உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு பழைய டயர்களை ராட்சத பாய்லர்களில் போட்டு உருக்கி அதில் இருந்து பர்னஸ் என்கிற ஒரு வித ஆயிலும், டயரின் கருப்பு துகள்களும் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன.இந்த பர்னஸ் ஆயில் தார் ரோடு உள்பட பல்வேறு பயன்பாட்டிற்கும், டயர் துகள்கள் புதிய நைலான் மிதியடி போன்ற பொருட்களுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள 3 பாய்லர்கள் ஷிப்டு முறையில் ஒவ்வொன்றாக
இயக்கப்படுகிறது. மொத்தம் 12 வடமாநில தொழிலாளர்கள் தற்போது இங்கு வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஒரு பாய்லரை வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மட்டும் இயக்கி கொண்டிருந்தனர். பாய்லரின் கொதிகலன் அதிக அழுத்தத்துடன் வெப்பமாக இருந்த நிலையில் அதனை தொழிலாளர்கள் லேசாக திறந்ததாக கூறப்படுகிறது.

2 பேர் பலி
இதனையடுத்து அந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், அதிக அழுத்தத்துடன் அதன் முன்பக்க கதவு திறந்தது. பாய்லர் வெடித்ததால் அங்கிருந்த இரும்பு கூரை மற்றும் அருகே இருந்த பொருட்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.இந்த விபத்தில், வடமாநில தொழிலாளர்களான ஜிஜேந்திரா (வயது 32), குந்தன் ஓசாரி (21) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தவிர படுகாயமடைந்த ஜெய்தீப் வசன்யா (21) உள்பட 3 வடமாநில தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவ இடத்தை கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யனார் அப்பன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story