கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் எதிரொலி: கேரளாவில் இருந்து சென்னை வரும் ரெயில்களில் தூய்மை பணி தீவிரம்


கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் எதிரொலி: கேரளாவில் இருந்து சென்னை வரும் ரெயில்களில் தூய்மை பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 July 2021 8:14 PM IST (Updated: 12 July 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து சென்னை வரும் ரெயில்களில் தூய்மை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தொடர்ந்து மேலும் 14 பேருக்கும் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில், தமிழக-கேரள எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் தான் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கேரள மாநிலத்தை ஓட்டியுள்ள, கன்னியாகுமரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், ‘ஏடிஸ்’ கொசு புழு அழிப்பு பணிகளை தீவிரப்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதேபோல், எல்லை மாவட்டங்களில் தற்போது மழை பெய்துள்ளது. நல்ல தண்ணீரில் ‘ஏடிஸ்’ கொசு வளரும் என்பதால் வீட்டு அருகாமையில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்குவது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில்களில் தூய்மை பணி

மேலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், சரும பாதிப்பு, தலைவலி, மூட்டுவலி, சிவந்த கண்கள் போன்ற பாதிப்புதான் ஜிகா வைரசிற்கும் ஏற்படும் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக டாக்டரை அணுகவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் கொரோனா பாதிப்பும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளதால், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களில் கூடுதல் கவனம் செலுத்தி தெற்கு ரெயில்வே சுகாதார பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.

அந்தவகையில் கேரளாவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூருக்கு வரும் ரெயில்கள் பயணிகளை இறக்கி விட்ட பின்பு, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கொசுக்களை ஒழிக்கும் மருந்தையும், கொரோனா வைரசை ஒழிக்கும் மருந்தையும் சுகாதார ஊழியர்கள், ரெயில் பெட்டி முழுவதும் தெளித்து, தூய்மை பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கொசு ஒழிப்பு மருந்து

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தற்போது கொரோனா பரவலுக்கு இடையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுவதால், ரெயில் பெட்டிகளிலில் கொசுக்களை தேங்க விடாமல், இருக்க மருந்து தெளிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் ரெயில், ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு, பணிமனைக்கு கொண்டு வரப்பட்டவுடன், எங்கள் ஊழியர்களை கொண்டு கொசுக்களை ஒழிக்கும் மருந்து தெளிக்கப்படுகிறது.

கேரள ரெயில் மட்டுமின்றி, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரெயில்களிலும், இந்த கொசு ஒழிப்பு பணிகளும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது, ’ என்றார்.

Next Story