திருத்தணி முருகன் கோவிலில் பிரசாதத்திற்கு அரிசி வினியோகம் செய்யும் டெண்டர் தள்ளிவைப்பு; அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்


திருத்தணி முருகன் கோவிலில் பிரசாதத்திற்கு அரிசி வினியோகம் செய்யும் டெண்டர் தள்ளிவைப்பு; அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 13 July 2021 12:37 PM IST (Updated: 13 July 2021 12:37 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலுக்கு பிரசாதம் தயார்படுத்த தேவையான அரிசி வினியோகம் செய்வதற்கான டெண்டர் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

கோவிலில் ஏலங்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு சொந்தமான கடைகள், பிரசாதம் தயார் செய்ய தேவையான அரிசி வினியோகம் செய்வதற்கான டெண்டர், முடி காணிக்கை எடுப்பதற்கான ஏலம் உள்பட பலவகை ஏலங்கள் நேற்று விடுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த ஏல நிகழ்ச்சிக்கு திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்சோதி மற்றும் திருவேற்காடு கோவிலில் ஆணையர் லட்சுமணன் சிறப்பு 
அதிகாரியாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கணினி சரிபார்த்தல், பால் சப்ளை, ஏ.சி., கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுக்கான ஏலம் விடப்பட்டன.அதன்பின்னர், திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களுக்கு பிரசாதம் தயார் செய்ய தேவையான அரிசி வினியோகம் செய்வதற்கான டெண்டரை அதிகாரிகள் தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
இந்த டெண்டரை எடுக்க அ.தி.மு.க.. சார்பில் சில பிரமுகர்கள் வந்து காத்திருந்த நிலையில் அதிகாரிகள் திடீரென்று டெண்டரை தள்ளிவைப்பதாக அறிவித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் அ.தி.மு.க. பிரமுகர்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த ஏல நிகழ்ச்சியில் திருத்தணி கோவிலுக்கு வெளிப்புறம் உள்ள 16 கடைகள், கோவிலுக்கு கீழே சன்னதி தெருவில் உள்ள 16 கடைகள் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட முடியினை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் இந்த ஏலங்கள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன.

Next Story