குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2021 11:08 PM IST (Updated: 13 July 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி: 

தேனி அல்லிநகரம் நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிஓடைத் தெரு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

 இதனால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பரிதவித்து வந்தனர். பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பொம்மையகவுண்டன்பட்டியில் தேனி-பெரியகுளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலையில் காலிக்குடங்களை வரிசையாக வைத்து மறியல் செய்தனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

நகராட்சி நிர்வாகம் மூலம் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்டு மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story