வணிக வளாகங்கள், கடைகள் இடித்து அகற்றம்


வணிக வளாகங்கள், கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 14 July 2021 1:01 AM IST (Updated: 14 July 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பீ.பி.குளம் பகுதியில் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

மதுரை,ஜூலை
மதுரை பீ.பி.குளம் பகுதியில் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
கண்மாய் ஆக்கிரமிப்பு
மதுரை பீ.பி.குளம், முல்லைநகர், மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்மாய்களை ஆக்கிரமித்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 
இது குறித்து ஐகோர்ட்டு விசாரணை நடத்தி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்க கோரி சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நேற்று முன் தினம் பீ.பி.குளம் சந்திப்பு பகுதியில் திடீரென்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இடிப்பு
இந்த நிலையில் அந்த பகுதியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனித்தனி கடைகள், வணிக வளாகங்களை இடிக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் அங்கு 80-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்களை இடித்து தள்ளினர்.
அப்போது வீடுகளையும் இடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Next Story