மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் விடிய விடிய அதிகாரிகள் சோதனை


மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் விடிய விடிய அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 14 July 2021 1:14 AM IST (Updated: 14 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் நேற்று இரவு விடிய, விடிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலையில் கரிமேடு மார்க்கெட் கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 630 கிலோ மீன்களை அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மதுரை,ஜூலை.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் நேற்று இரவு விடிய, விடிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலையில் கரிமேடு மார்க்கெட் கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 630 கிலோ மீன்களை அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதுரை மீன் மார்க்கெட்
மதுரையில் கடந்த சில தினங்களாக கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், ரசாயன பொருள் கலந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் விற்பனை செய்யப்படும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதாகவும், கலப்பட பொருள் கலந்திருப்பதால் அந்த மீன்களை சாப்பிடுவோருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று காலை மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சில கடைகளில் விற்கப்பட்ட மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதும், சில மீன்கள் அழுகியிருப்பதும் தெரியவந்தது.
630 கிலோ மீன்கள்
இதைத் தொடர்ந்து அங்குள்ள கடைகளில் இருந்த 630 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து அழித்து குப்பைத் தொட்டியில் வீசினர்.
வெளிமாநிலத்தில் இருந்து வரும் மீன்களை வாங்கி விற்பனை செய்வதாகவும், தங்களுக்கு மீன்களில் ரசாயனம் கலந்திருப்பது குறித்து எதுவும் தெரியாது என்றும் அதிகாரிகளிடம் மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இனியும் ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் அழுகிய மீன்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். மதுரையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி மீன்களை பறிமுதல் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மாட்டுத்தாவணி
இதேபோல் மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கன்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட மீன்களை ஆய்வக உதவியாளர்கள் உதவியுடன் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
அப்போது ரசாயன பொருட்கள் தடவிய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அகற்றினர். அதிகாரிகள் ஆய்வு நடத்துவதை அறிந்த சிலர் மீன் வாகனங்களை மாட்டுத்தாவணி மார்க்கெட் வளாகத்திற்குள் கொண்டு வராமல் வெளிப்பகுதியில் நிறுத்திவிட்டு சென்றனர். இந்த சோதனை அதிகாலை வரை விடிய விடிய நடந்தது.
இதுகுறித்து அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், “நல்ல மீன்களை விற்பனை செய்யாவிட்டால் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும். பொதுமக்களும் தாங்கள் வாங்கும் மீன்கள் நல்லதா, கெட்டதா என்பதை உறுதி செய்துவிட்டு அது கெட்டுப் போய் இருக்கும் பட்சத்தில் அது குறித்து 944404 2322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
ஆய்வின்போது மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story