ஆறுகள் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தொடர்மழை
வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 3-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக வால்பாறையில் உள்ள ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதுபோன்று வனப்பகுதியில் உள்ள ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதுபோன்று சோலையார் சுங்கம் ஆற்றிலும் தண்ணீர் அதிகமாக செல்கிறது. குறிப்பாக சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும். ஆங்காங்கே வனப்பகுதிகளில் இருந்து புதிய புதிய அருவி கள் தோன்றி தண்ணீர் கொட்டுகிறது. அதுபோன்று சோலையார் அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் நீரார், கீழ் நீரார் அணை பகுதிகளை சூழ்ந்துள்ள வனப்பகுதிகளிலும், அக்காமலை புல்மேடு வனப்பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நீர்மட்டம் உயர்வு
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 160 அடி உயரம் கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 125 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,822 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது .
அணையில் இருந்து சோலையாறு மின்நிலையம்-1 மூலம் 407 கனஅடியும், சோலையாறு மின் நிலையம் -2 மூலம் 445 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
மேலும் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் சாலையில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சுற்றுலா மையமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து மழை பெய்து வருவதால், வால்பாறை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைகளை தலைகளில் போட்டுக்கொண்டு கடும் குளிரின் மத்தியிலும் தேயிலை இலைபறிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வெள்ளநிவாரண முகாம் அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
குரங்கு நீர்வீழ்ச்சி
அதுபோன்று கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனா காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டது. மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 1008 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 78 அடியாக உள்ளது.
பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 1,423 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 38.72 அடியாக உயர்ந்து உள்ளது. பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story