மறைமுக ஏலத்தில் விளை பொருட்களுக்கு அதிக லாபம்
மதுரை வேளாண் விற்பனைக்குழு நடத்தும் மறைமுக ஏலத்தில் பங்கேற்று விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறலாம் என வேளாண் விற்பனைக்குழு செயலாளர் கூறினார்
மதுரை
மதுரை வேளாண் விற்பனைக்குழு நடத்தும் மறைமுக ஏலத்தில் பங்கேற்று விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறலாம் என வேளாண் விற்பனைக்குழு செயலாளர் கூறினார்.
விற்பனைக்குழு
மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி கூறியதாவது, மதுரை வேளாண் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிட்டங்கிகள் மூலம் குறைந்தபட்ச வாடகையில் விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்தும், குறைந்தபட்ச வட்டியில் பொருளீட்டுக் கடனும் பெற்று வருகின்றனர்.
மேலும், தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்துச் சென்று மறைமுக ஏலம் முறையில் விற்பனை செய்து உரிய விலையினை பெற்று வருகின்றனர். தற்போது, மதுரை மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ‘இ-நாம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2,740 விவசாயிகள் மற்றும் 76 வியபாரிகளும், உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 141 விவசாயிகளும், 21 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர்.
மறைமுக ஏலம்
இந்த திட்டத்தின் கீழ் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகளிடம் இருந்து மாதிரி பெறப்பட்டு வியாபாரிகளின் பார்வைக்கு வைக்கப்படும். மறைமுக ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பதிவு செய்த வியாபாரிகள் மறைமுக ஏலம் முறையில் ‘இ-நாம்' ஆப் மூலம் தங்களின் விலையை விளைபொருட்களுக்கு பதிவு செய்வர். மறைமுக ஏலத்தின் அடிப்டையில் அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ள வியாபாரிக்கு விளைபொருள் விற்பனை செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உரிய பணம் உடனடியாக வரவு வைக்கப்படும்.
நேற்று மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு ‘இ-நாம்' திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய 16 விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட நெல் குவியல்களில் 4 விவசாயிகளின் 32 ஆயிரத்து 955 டன் அளவிற்கு 5 வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. எனவே, மதுரை மாவட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தையும், ‘இ-நாம்' மறைமுக ஏலத்திலும் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story