காஞ்சீபுரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியை தேடி வந்தனர்.
விசாரணையில் செவிலிமேடு மிலிட்டரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் சோமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மேல் திருவள்ளூர் குளத்துமேடு தெருவை சேர்ந்த அசாருதீன் (21) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது.
அசாருதீனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்திரமேரூர் பட்டாம் குளத்தை அடுத்த வினோபா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 28). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாச மாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து காஞ்சீபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வினோபா நகருக்கு சென்று செல்வகுமாரிடம் விசாரித்த பின்னர் காஞ்சீபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார். இதையடுத்து செல்வகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story






