மின்சார ரெயிலில் தவறவிட்ட 20 பவுன் நகை மீட்பு


மின்சார ரெயிலில் தவறவிட்ட 20 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 15 July 2021 4:21 PM IST (Updated: 15 July 2021 4:21 PM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயிலில் தவறவிட்ட 20 பவுன் நகை மீட்பு.

சென்னை,

சென்னையை அடுத்த நங்கநல்லூரை சேர்ந்தவர் ஜானகீஸ்வரி. இவர் தனது கணவருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மின்சார ரெயிலில் நேற்று அம்பத்தூருக்கு சென்றார். பூங்கா ரெயில் நிலையம் வந்ததும் மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் செல்வதற்காக இருவரும் இறங்கினர். ரெயில் புறப்பட்டு சென்ற பிறகு தான், ஜானகீஸ்வரி தான் கொண்டு வந்த பையையும், அதில் இருந்த 20 பவுன் நகையையும் ரெயிலிலேயே தவற விட்டது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரிடம் பையை தவறவிட்டது குறித்து அவர்கள் தெரிவித்தனர். உடனே போலீசார் கடற்கரை ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மின்சார ரெயில் கடற்கரை ரெயில் நிலையம் வந்ததும், அங்கு தயாராக இருந்த போலீசார், ரெயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அவர் தவற விட்ட பை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஜானகீஸ்வரியை கடற்கரை ரெயில்வே பாதுகாப்புபடை போலீஸ் நிலையம் வரவழைத்து, அவரிடம் போலீசார் அந்த பையையும், அதில் இருந்த 20 பவுன் நகையும் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Next Story