காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2021 9:49 PM IST (Updated: 15 July 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னையன் சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி டிரைவர்களிடம் இருந்து 2 பேர் செல்போன்களை பறித்து செல்வதாக அங்கு இருந்த ரோந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். காஞ்சீபுரம் பொன்னேரி கரையில் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை பட்டாபிராமை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 22), ஜெகன் (20) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தங்கள் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு அல்லது காஞ்சீபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 044-27236111 9498181232 என்ற எண்ணுக்கும் தகவல் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Next Story