கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே வேளையில் பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
48 பேர் உயிரிழந்தனர்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 38 ஆயிரத்து 274 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,977 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 78 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 383 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 3,188 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 10 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை அச்சம்
அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 462 பேர், தட்சிண கன்னடாவில் 224 பேர், ஹாசனில் 158 பேர், மைசூருவில் 197 பேர், சிக்கமகளூருவில் 109 பேர், உடுப்பியில் 110 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் கொரானா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 10 பேரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், மைசூருவில் 5 பேரும் என மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் பிற பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபோதும், தலைநகர் பெங்களூருவில் மட்டுமே 400-க்கு கீழ் குறையாமல் பாதிப்பு பதிவாகி வருகிறது. பெங்களூருவில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், அது இன்னும் கட்டுக்குள் வராமல் இருப்பது சுகாதாரத்துறை சற்று அச்சம் அடைந்துள்ளது.
Related Tags :
Next Story