கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும்


கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 16 July 2021 12:11 PM GMT (Updated: 16 July 2021 12:11 PM GMT)

கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில், ரூ.69 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீத தொகை என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

விவரங்கள் இல்லை

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை, ஓய்வூதியம் வழங்குவது குறித்த விவரங்கள் மட்டுமே அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதவித்தொகை குறித்த விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி மற்றவர்களுக்கு கொடுக்கும் நிவராண தொகையை விட 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், ஆனால் கொரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

மறுபரிசீலனை

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை வழங்க மாற்றுத்திறனாளிகளை கண்டறிய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு? எந்த முறையில் வழங்கப்பட வேண்டும்? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.

மேலும், “ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக தமிழக அரசு வழங்க வேண்டும். பின்னர் அதன் விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Next Story