ஆடி மாதம் என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்


ஆடி மாதம் என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2021 10:19 PM GMT (Updated: 18 July 2021 10:19 PM GMT)

ஆடி மாதம் என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம் வரத்து குறைவால் விலை உயர்வு.

திருவொற்றியூர்,

ஆடி மாதம் என்றாலே வீடுகளில் அம்மனுக்கு கூழ் வார்த்து, படையலிட்டு வழிபடுவது வழக்கம். அம்மனுக்கு படைக்கும் படையலில் மீன் உணவு முக்கிய பங்கு வகிப்பதால் ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் வாங்க காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர். கடந்த 2 மாதங்களாகவே மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வகை மீன்கள் கிடைக்கவில்லை. குறைந்த அளவிலேயே சிறிய வகை மீன்கள் மட்டுமே சிக்கின. மீன்கள் வரத்து குறைவால், மீன்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்தது. ஆனாலும் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச்சென்றனர்.

கட்டுக்கடங்காமல் உயரும் டீசல் விலை ஏற்றத்தினால் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து நஷ்டத்தையே சந்திப்பதாலும் மீன் விலை உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன்கள் வரத்து வகை வகையாக விதவிதமாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என நம்பி வந்த மீன் பிரியர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

Next Story