கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பட்டதாரி வாலிபர்


கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பட்டதாரி வாலிபர்
x
தினத்தந்தி 19 July 2021 8:53 PM IST (Updated: 19 July 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டதாரி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்: 


தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவருடைய கையில் ஒரு பை இருந்தது. பின்னர் அந்த வாலிபர், பையில் இருந்த கேனை வெளியே எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
இதைப்பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த ரகு (வயது 26) என்றும், எம்.எஸ்சி. (வேதியியல்) பட்டப்படிப்பு படித்திருப்பதும் தெரியவந்தது.

 பன்றிகளால் சுகாதாரக்கேடு
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டருகே சிலர் பன்றிகளை வளர்க்கின்றனர். அதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவரிடம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார். அதன்பேரில் அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டியில் மனுவை போட்டு சென்றார். அதன்பிறகு அவர், விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

கருணை கொலை
இதேபோல் சாணார்பட்டி அருகே உள்ள ஆவளிபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம், தனது மனைவி கவிதா மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மகனுடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது மகனுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

கூலிவேலை பார்க்கும் தன்னால் மகனின் மருத்துவ செலவுக்கு பணம் செலுத்த இயலவில்லை. எனவே எனது மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story