கிராம மக்கள் திடீர் மறியல்
கள்ளிக்குடி அருகே வேறு இடத்தில் கால்நடை மருத்துவமனையை கட்டக் கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம், ஜூலை.
கள்ளிக்குடி அருகே வேறு இடத்தில் கால்நடை மருத்துவமனையை கட்டக் கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்நடை மருத்துவமனை
கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை விரிவுபடுத்தி புதுப்பிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அரசுக்கு பரிந்துரை செய்து கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
ஏற்கனவே மருத்துவமனை இருந்த இடத்திற்கு பதிலாக மற்றொரு இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து இடத்தையும் தேர்வு செய்தது.
ஆனால் அந்த இடத்தில் குராயூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான மரங்களை வளர வைத்து பசுமையாக்கி உள்ளனர். எனவே இந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கூடாது, ஏற்கனவே இருந்த இடத்திலேயே புதிய கால்நடை மருத்துவமனையை அமைத்து கொள்ளுமாறும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்க ஊராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அந்த இடத்திலேயே மருத்துவமனை கட்ட நடவடிக்கை மேற்கொண்டது.
திடீர் மறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு நேற்று காலை குராயூர் தேவர் சிலை அருகே கள்ளிக்குடி-காரியாபட்டி ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் கள்ளிக்குடி போலீசார் குராயூர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் புதிய கால்நடை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சுமுக தீர்வு
இது குறித்து ஊராட்சி தலைவர் வீரபத்திரன் கூறுகையில், இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கலந்து பேசி யாருக்கும் பிரச்சினை இல்லாமல் சுமுகமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story