விரைவில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பேட்டி


விரைவில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2021 6:44 AM IST (Updated: 21 July 2021 6:44 AM IST)
t-max-icont-min-icon

விரைவில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பேட்டி.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நேற்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டு அதன் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாறில் உள்ள புத்தகம் சேமிப்பு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். அதைத்தொடர்ந்து திருவள்ளூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கே புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ஒரு பணியை தந்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் அச்சடிக்கும் பணியை வழங்கி உள்ளார். தாய்மொழியில் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்கி அண்ணா, கருணாநிதி ஆகியோர் கண்ட கனவை நனவாக்கி, தாய்மொழியில் உயர்கல்வி படித்தல் என்ற முதல்-அமைச்சரின் உயரிய லட்சியத்தை பாடநூல் கழகம் விரைவில் நிறைவேற்றும். மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் தமிழில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் திராவிடபக்தன், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால், மாவட்ட பிரதிநிதி தலக்காஞ்சேரி குப்பன், வி.எஸ். நேதாஜி, களாம்பாக்கம் பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வட்டார அலுவலர் கவிதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story