அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; பெண் பலி
திண்டுக்கல் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியதில் பெண் பலியானார். அவருடைய கணவர், குழந்தை படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் :
நேருக்கு நேர் மோதல்
கோவை குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 31). இவர் கோவையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நிவேதா (29). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் செல்லமுத்து, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு காரில் கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை செல்லமுத்து ஓட்டினார்.
திண்டுக்கல்-பழனி சாலையில் பாலம் ராஜக்காபட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது.
பெண் பலி
பின்னர் அந்த பஸ் சாலையோரத்தில் பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து படுகாயமடைந்த செல்லமுத்து, நிவேதா, குழந்தை ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரையும் மீட்டனர்.
தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நிவேதா பரிதாபமாக இறந்தார். செல்லமுத்து, குழந்தை ஜெயஸ்ரீ ஆகிய 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்சை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (44) மற்றும் பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story