சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடத்தூர்
கோபி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ சிறப்பு விழா நடைபெற்றது. பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதேபோல் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் நடராஜர் சிவகாமி அம்பாள் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதேபோல் கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விசுவநாதர் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் மூலவர் மகுடேஸ்வரருக்கும் அபிஷேகம் நடத்தி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற செல்லீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து உற்சவர் நந்தி சிலை அருகே கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆப்பக்கூடல் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், கவுந்தப்பாடி, மேட்டுப்பாளையம் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டார்கள்.
சிவகிரி
சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை கிழக்கு தெருவில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரருக்கு சரவண சாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் நர்மதை மருந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related Tags :
Next Story