ஈரோட்டில் பயங்கரம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எரித்துக்கொலை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை எரித்துக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை எரித்துக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எரித்து கொலை
ஈரோடு கருங்கல்பாளையம் நஞ்சப்பாநகர் காவிரி ஆற்றங்கரையோரத்தில் மயானம் உள்ளது. அங்கு இறுதி சடங்கு செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தில் நேற்று காலை பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் ஈரோடு சுண்ணாம்புஓடை பாலக்காட்டூரை சேர்ந்த அசேன்சேட்டு (வயது 52) என்பதும், திருமணமாகாத அவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நஞ்சப்பாநகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் அசேன்சேட்டுவை தாக்கி உள்ளார்கள். அப்போது அவரது தலையில் கல்லை போட்ட மர்மநபர்கள், எரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்கள். கொலை செய்யப்பட்ட அசேன்சேட்டுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அசேன்சேட்டுவை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மர்மநபர்கள் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story