கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள் வீட்டில் போலீசார் சோதனை பொது மேலாளர் கைது


கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள் வீட்டில் போலீசார் சோதனை பொது மேலாளர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 3:54 PM GMT (Updated: 2021-07-22T21:24:55+05:30)

ரூ.15 கோடி மோசடி செய்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் பொது மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்,

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள்.

இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைத்து ஹெலிகாப்டர் ஒன்றை வைத்திருப்பதால், `ஹெலிகாப்டர் சகோதரர்கள் என இந்தப் பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனர். சகோதரர்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தகப்பிரிவு தலைவராக பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதன் மூலம் கும்பகோணம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்காக இவர்கள், ஏஜெண்டுகளை நியமித்து அவர்களுக்கு தனி கமிஷன் கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள், தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா என்பவர் மனைவி பைரோஜ் பானு, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்யிடம் கடந்த வாரம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள் தங்களிடம் இருந்து ரூ.15 கோடி வரை பணத்தை பெற்று ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கும்பகோணம் தீட்சிதர் தோட்டம் பகுதியில் உள்ள கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்களின் வீடு மற்றும் கொற்கை கிராமத்தில் உள்ள பால்பண்ணை ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சகோதரர்கள் இருவரும் வீட்டில் இல்லாததால் அவர்கள் குறித்து வீட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் அலுவலக மேலாளர், பணியாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் சகோதரர்கள் இருக்கும் இடம் தெரியாததால் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பொதுமேலாளர் கும்பகோணம் நால்ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்தன்(வயது 56) என்பவரை கைது செய்து விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மற்றும் ஸ்ரீதர், மீரா, ரகுநாதன் ஆகிய 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கும்பகோணம் பகுதியில் பிரபல தொழிலதிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது வீடு, பால்பண்ணையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story