போக்சோவில் 2-வது முறை கைதானால் குண்டர் சட்டம் பாயும்; கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை


போக்சோவில் 2-வது முறை கைதானால் குண்டர் சட்டம் பாயும்; கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 July 2021 8:45 PM GMT (Updated: 22 July 2021 8:45 PM GMT)

போக்சோவில் 2 -வது முறை கைதானால் குண்டர் சட்டம் பாயும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு
போக்சோவில் 2 -வது முறை கைதானால் குண்டர் சட்டம் பாயும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திறன் வளர்ப்பு பயிற்சி
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், போலீஸ் துறையினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசினார்கள். 
இதையொட்டி குழந்தை திருமண தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி உள்பட பலருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி, விருது வழங்கினார். அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆன்ட்ரேவ் சேசுராஜ், பாலமுருகன் ஆகியோர் குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ, இளைஞர் நீதி சட்டம் குறித்து பேசினார்கள்.
குண்டர் சட்டம்
முன்னதாக கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் போலீஸ்துறை செயல்பாடு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் காக்கும் கரங்கள் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 34 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கடந்த மாதத்தைவிட இந்த மாதம் குறைந்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இந்த குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே 450 கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். இந்த குழுக்கள் மூலம் தற்போது வரை 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் தங்களது குழந்தைக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது அதை மூடி மறைக்காமல் போலீசாரிடம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ வழக்குகளும், இந்த மாதம் இதுவரை 6 வழக்குகளும் பதிவாகி உள்ளன. போக்சோ வழக்கில் ஒருவர் 2-வது முறை கைதானால் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் குழந்தைகள் நல குழுமம், குழந்தைகள் சமூக நலத்துறை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நன்நடத்தை அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டார்கள்.

Next Story