நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1,742 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.46 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 19 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.69 அடியாக இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடியும், பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story