தொழிற்சாலையில் திருடிய 5 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தில் ‘லிப்ட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 12-ந் தேதி ரூ.2½ லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜா ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எடையார்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 26), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எலிமியான் கோட்டூர் மேட்டு தெருவை சேர்ந்த கணபதி (23), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கப்பாங்கோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (25), திருவள்ளூர் கம்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் (43), மேல் கொண்டையூர் பகுதியை சேர்ந்த சிவா (28) ஆகியோர் இரும்பு பிளேட்டுகளை திருடியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பிளேட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story