போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: திருத்துறைப்பூண்டியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெருவில் கடந்த 2-ந் தேதி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். இதில் 2 பேரும் மதுபாட்டில்களை ‘டேப்’ மூலமாக உடலில் ஒட்டி, அவற்றை நூதன முறையில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த ‘வீடியோ’ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் சம்பவத்தன்று மதுபாட்டில் கடத்தியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுவித்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அளித்த பரிந்துரையின் பேரில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, ஏட்டுக்கள் சண்முகசுந்தரம், ராஜா மற்றும் போலீசார் பாரதிதாசன், விமலா ஆகிய 6 பேரை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஒரே நேரத்தில் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தப்ப விட்ட நபர்களை பிடிக்க திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபரஞ்ஜோதி உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சம்பவத்தன்று மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோமளப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த அருண்ராஜ்(வயது28), கேசவன்(31) ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது. கோமளப்பேட்டையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story