காதலனுடன் சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி 2 பேர் கைது
மயிலாடுதுறையில், காதலனுடன் சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண், தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ந் தேதி இரவு 7 மணி அளவில் அந்த பெண் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மயிலாடுதுறையில் இருந்து முளப்பாக்கம் கிராமத்தை நோக்கி பழைய தரங்கம்பாடி ரெயில்வே சாலை அருகே சென்றனர். அப்போது அங்கு நின்று இருந்த மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்த காதலர்களை வழிமறித்து நிறுத்தினர்.
அவர்களில் ஒருவர் அந்த பெண்ணின் காதனை பிடித்துக்கொள்ள மற்றொருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார்.
உடனே அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த மர்ம நபர்கள் இருவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரது செல்போன் எண்ணை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்கள் மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜித்குமார்(வயது 24), செருதியூர் கீழத்தெருவை சேர்ந்த வைத்தியநாதன் மகன் பாலசுப்ரமணியன்(23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமார், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story