தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையை மாற்றியமைக்கும் பணி கலெக்டர் லலிதா ஆய்வு
மயிலாடுதுறை அருகே தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையை அதிநவீன அரிசி ஆலையாக மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலை அதிநவீன அரிசி ஆலையாக மாற்றியமைக்கும் பணி ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
அரவை பகுதி, அவியல் பகுதி, கொதிகலன் பகுதி, தானியங்கி மூட்டை தைத்தல் பகுதி என பணியினை நான்கு பகுதிகளாக பிரித்து, அவற்றில் கட்டுமான பணிகள், அதிநவீன எந்திரங்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது மின்வினியோகம் மற்றும் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், மீதம் உள்ள பணிகளின் விவரங்களை, பொறியாளரிடம் கேட்டறிந்து, பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், உதவி பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story