மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 6:22 PM GMT (Updated: 2021-07-23T23:52:38+05:30)

மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
ஆர்ப்பாட்டம்
41 ராணுவ பாதுகாப்பு ஆயுத உற்பத்தி பொதுத்துறை ஆலைகளை, 7 நிறுவனங்களாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மோட்டார் வாகனம், மின்சாரம் திருத்த சட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச‌. மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனியப்பன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். 
கோஷங்கள்
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. நிர்வாகி புகழேந்தி தலைமை தாங்கினார். எல்.டி.யு.சி. நிர்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் அசோகன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story