சிங்கம்புணரி,
சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் அழகேஸ்வரி(வயது 15). சிறுமி நேற்று மாலை சிங்கம்புணரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி சாலை வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த கார், சிறுமி மீது மோதியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரை ஓட்டி வந்த திருப்பத்தூர் தம்பிபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(38), காருக்குள் இருந்த திருப்பத்தூர் 4 ரோடு பகுதியை சேர்ந்த நாகப்பன்(48), சிங்கம்புணரி மேல தெருவை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.