கரும்பு லாரி நிற்காமல் சென்றதால் வாகன ஓட்டிகளை யானை துரத்தியது; ஆசனூர் அருகே பரபரப்பு
ஆசனூர் அருகே கரும்பு லாரி நிற்காமல் சென்றதால் வாகன ஓட்டிகளை யானை துரத்தியது.
தாளவாடி
ஆசனூர் அருகே கரும்பு லாரி நிற்காமல் சென்றதால் வாகன ஓட்டிகளை யானை துரத்தியது.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி யானைகள் அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றன.
குட்டியுடன் யானை
இந்த நிலையில் தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தில் விளையும் கரும்புகள் லாரி மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த கரும்பு லாரிகள் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது, டிரைவர்கள் கரும்புகளை சாலையோரமாக வீசி எறிவார்கள். இவ்வாறு சாலையோரம் கிடக்கும் கரும்புகளுக்காக அடிக்கடி யானைகள் காத்திருக்கும்.
இந்த நிலையில் நேற்று காரப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிர்பார்த்து குட்டியுடன் தாய் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.
துரத்தியது
அப்போது ஒரு லாரி கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்தது. ரோட்டில் காத்திருந்த தாய் யானை லாரியை வழிமறித்து கரும்பு கட்டை துதிக்கையால் இழுக்க முயன்றது. ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வளைத்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆவேசம் அடைந்த யானை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தியது.
இதேபோல் அந்த வழியாக வந்த ஒரு காரை மறிக்க ஓடிவந்தது. உடனே கார் டிரைவர் வேகமாக காரை இயக்கி தப்பினார். அப்போது இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் இந்த காட்சியை படம் பிடித்தார். அதைப்பார்த்து மேலும் ஆவேசம் அடைந்த யானைஅவரை துரத்தியது. அவர் உடனே ரோட்டோரத்தில் நின்ற ஒரு லாரியின் பின்பக்கத்தில் சென்று தப்பினார்.
இதைத்தொடர்ந்து யானை சுமார் 1 மணி நேரம் ரோட்டில் குட்டியுடன் அங்கும், இங்கும் நடமாடியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் யானை குட்டியுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது.
Related Tags :
Next Story