தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்; இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி


தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்; இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 24 July 2021 2:54 AM IST (Updated: 24 July 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

பவானி
தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். 
பழமை மாறாமல்...
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பவானி சங்கமேஸ்வரர் கோவில் பரிகாரத்துக்கு சிறந்த தலமாக இருப்பதால் இங்கு பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெறும். நவீன கார் நிறுத்தம் அமைக்கப்படும். அன்னதான கூடத்தை சீரமைத்து கான்கிரீட் தளம் அமைக்கப்படும். சின்ன, சின்ன பிரகாரங்களில் தூண்கள் கட்டப்படும். பரிகாரம் செய்யும் பவானி கூடுதுறை தூய்மையாக்கப்படும்.
தரிசன கட்டணம்
தமிழகத்தில் முதல்நிலை ஆலயங்கள் 47 உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள கோவில்கள் 530 உள்ளது. இதில் 420 கோவில்களை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதிக வருமானம் வரும் கோவில்களை விட வருமானம் இல்லாத கோவில்கள் அதிக அளவில் உள்ளன. எனினும் இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பவானி நகர  தி.மு.க. செயலாளர் நாகராஜன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர்கள் மங்கையர்க்கரசி, அன்னக்கொடி, இந்து அறநிலையத்துறை சேலம் செயற்பொறியாளர் ஜமுனா தேவி, உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 
ஆய்வு
முன்னதாக பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். அவரை கோவில் அர்ச்சகர்கள் மாலை கொடுத்து வரவேற்றனர். பின்னர் சங்கமேஸ்வரர் கோவில், வேதநாயகி அம்மன் சன்னதி, ஆதி கேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் உள்ள வெள்ளித் தேரையும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான தேரையும், சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தேரையும் பார்வையிட்டார் 
ஆகாயத்தாமரைகளை அகற்ற....
கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பலகை வைக்கவேண்டும் என்றும், வெள்ளித்தேர் உலா நடத்த வேண்டும் என்றும் கோவில் உதவி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
கோவிலில் இரவு காவலராக பணியாற்றிய பீம் பிரசாத் சர்மா என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய மகன் ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.
அதன்பின்னர் கோவிலுக்கு பின்புறம் உள்ள கூடுதுறை காவிரி ஆற்றின் படித்துறையில் பரிகார கூடம், அன்னதான கூடம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பவானி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை பார்த்து, அருகே இருந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story