ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு
ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடிவெள்ளி
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன்களுக்கு உகந்ததாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக அம்மன் கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
அதன்படி நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பண்ணாரி
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆனால் அதிகாலையிலேயே பக்தர்கள் வரிசையில் வந்து நின்றிருந்தார்கள். அம்மனை தரிசனம் செய்த பின்னர் குண்டம் அமைக்கப்படும் இடத்துக்கு சென்றார்கள். அங்கு தங்களுடைய வேண்டுதல்களை கூறி உப்பு, மிளகு தூவி வணங்கினார்கள். மதியத்துக்கு மேல் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள்.
அந்தியூர்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பிறகு பச்சை பட்டு உடுத்தி, எலுமிச்சை மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
அந்தியூர் மற்றும் தவிட்டுபாளையம், சந்தியபாளையம், காட்டுப்பாளையம், புதுப்பாளையம், பர்கூர், செம்புளிச்சாம்பாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தார்கள்.
கடத்தூர்
கோபியில் உள்ள சாரதா மாரியம்மன் கோவிலில் காலை 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதேபோல் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து குண்டம் அமைக்கும் இடத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில், படையாட்சி மாரியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சை நாயகி அம்மன், அழுகுளி செல்லாண்டியம்மன் மற்றும் கோபி சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேசுவரர் கோவிலில் வீரநாராயணப் பெருமாள் மகாலட்சுமி சன்னதியில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தாயாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதேபோல் கொடுமுடி வடக்கு வீதி புது மாரியம்மன் கோவில், சென்னசமுத்திரம் மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. ஏமகண்டனூர் ஆச்சி அம்மன் கோவிலில் சிறப்பு வேள்விகளும், கோ பூஜையும் நடைபெற்றது.
சிவகிரி-அம்மாபேட்டை
சிவகிரி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் எல்லை மாகாளி அம்மன், பொன்காளியம்மன், மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அம்மாபேட்டை செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள சின்னமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
Related Tags :
Next Story