தலமலை அருகே கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்


தலமலை அருகே  கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 24 July 2021 9:16 PM IST (Updated: 24 July 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

தலமலை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை வீட்டை சேதப்படுத்தியது.

தலமலை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை வீட்டை சேதப்படுத்தியது.
உணவு-தண்ணீரை தேடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியே வரும் யானை மற்றும் வனவிலங்குள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன.
அடர்ந்த வனப்பகுதி
  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்டது இட்டகரை கிராமம்.  இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  வனப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு  வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. இந்த யானை அருகே இருந்த இட்டகரை கிராமத்துக்குள் புகுந்தது. 
வீடு சேதம்
காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டு சிலர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். யானையை பார்த்ததும் பீதி அடைந்த கிராம மக்கள் கூச்சல் போட்டும், தகர டப்பா மூலம் ஒலி எழுப்பியும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கும் இங்குமாக சென்று போக்குகாட்டிக் கொண்டு இருந்தது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த பாலன் (வயது 41) என்பவருடைய வீட்டின் மேற் கூரையின் சீட்டுகளை துதிக்கையால் இழுத்து தூக்கி வீசியது. இதில் அவருடைய வீடு சேதம் அடைந்தது. 
அகழி அமைக்கவேண்டும்
அதனை தொடர்ந்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களையும், வீட்டையும் சேதப்படுத்துகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் யானைகள் கிராமத்துக்குள் புகாதவாறு வனப்பகுதியை சுற்றிலும் அகழி அமைக்க வேண்டும்’ என்றனர்.

Next Story