சென்னிமலை முருகன் கோவிலின் மலைப்பாதை ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும்
சென்னிமலை முருகன் கோவிலின் மலைப்பாதை ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னிமலை முருகன் கோவிலின் மலைப்பாதை ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வரவேற்பு
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்தார்.
இவரை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் வே.சபர்மதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கோவில் குருக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் முருகன் சன்னதிக்குள் சென்று அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
ரூ.7 கோடி மதிப்பில்
அதைத்தொடர்ந்து கோவிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அமைச்சர் சேகர்பாபு பெற்று கொண்டார். பின்னர் கோவிலில் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோவிலில் ரூ.57 லட்சம் மதிப்பில் அன்னதான மண்டபம் கட்டும் பணிகள் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளது. மலைப்பாதை தார் சாலையை புதுப்பித்தல், குழாய்கள் பதித்தல் மற்றும் கான்கிரீட் அமைக்கும் பணிகள் சுமார் ரூ.3 கோடியே 35 லட்சம் மதிப்பிலும், மலைப்பாதையில் பேரிகார்டு வைத்தல் மற்றும் சாலை பாதுகாப்பிற்கு ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பிலும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்கள்
மலைக்கோவிலில் புதிதாக வணிக வளாக கடைகள் கட்டும் பணிகள் ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக புதிதாக முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள் ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க ரூ.14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் முள் கம்பி அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்று கூறினார்.
அதேபோல் ராஜகோபுரத்தின முன் பகுதியில் வலதுபுறம் இளைப்பாறும் மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிகாரிகள்
அப்போது திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலர் எம்.அருள்குமார், தி.மு.க இளைஞரணி நிர்வாகி கொடுமணல் கோபால் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story